உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்குப் பிறந்த அந்தப் பெண் குழந்தை, உடல் வெப்பநிலையைப் பராமரிக்கும் கருவியில்  வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அந்தக் கருவி தீப்பிடித்ததில், உள்ளே இருந்த குழந்தை பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்தது.

இந்தத் துயரச் சம்பவத்தை மருத்துவமனை நிர்வாகம் பல மணி நேரம் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. விஷயம் தெரிந்ததும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழப்பு குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.