உலக அளவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் பின்னணியில், சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய ‘நிதாரி’ கொலை வழக்கு மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், மைனர் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மற்றும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையிலேயே உயிரிழந்த நிலையில், தற்போது அது தொடர்பான 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மனித மாமிசத்தை உண்டது உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுவது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.
எப்ஸ்டீன் வழக்கைப் போலவே, கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் நொய்டா அருகே உள்ள நிதாரி பகுதியில் அரங்கேறிய கொடூரங்கள் தற்பொழுது ஒப்பிடப்படுகின்றன.
அதாவது மொகிந்தர் சிங் என்பவரது பங்களாவில் வேலை செய்து வந்த சுரேந்தர் என்பவருடன் இணைந்து, அப்பகுதியில் வசித்து வந்த ஏழைச் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியும், பங்களாவிலேயே புதைத்தும் வைத்துள்ளனர். காணாமல் போன ஒரு பெண் அந்த வீட்டிற்குச் சென்றதை அறிந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், அங்கு சோதனை செய்த போலீஸார் மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்தனர்.
விசாரணையில், வேலைக்காரர் சுரேந்தர் 16 வயது சிறுமிகளின் சடலங்களுடன் உடலுறவு கொண்டதுடன், அவர்களின் உடல் உறுப்புகளை அறுத்துச் சாப்பிட்ட திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் முதலில் மரண தண்டனை விதித்தது. எனினும், மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 2023-இல் மொகிந்தர் சிங்கையும், கடந்த ஆண்டு நவம்பரில் சுரேந்தரையும் விடுவித்தன. நாட்டையே உலுக்கிய இத்தகைய கொடூர வழக்கில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பியது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை நிதாரி வழக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
