தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், சிவகங்கையில் இந்த விசில் சின்னம் ஒரு திமுக கவுன்சிலரை செம கடுப்பாக்கியுள்ளது. சிவகங்கை நகராட்சியின் 21-வது வார்டு திமுக கவுன்சிலர் அயூப் கான், இன்று காலையில் தனது வார்டில் குப்பை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர் விசிலடித்ததைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டார்.

“இனிமேல் என் வார்டில் யாரும் விசிலடிக்கக் கூடாது” என்று கறாராகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணியாளர் வைத்திருந்த விசிலைப் பிடுங்கி குப்பை வண்டியிலேயே வீசி எறிந்தார்.

“விசிலுக்குப் பதிலாக இனி இந்த ஸ்பீக்கரைப் பயன்படுத்திப் பாட்டுப் போடுங்க, விசில் சத்தம் இங்கே கேட்கக் கூடாது” என அதிரடி உத்தரவு போட்டு ஸ்பீக்கரையும் அவரே வழங்கினார்.

தவெக-வின் விசில் சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிடுமோ என்ற பயத்தில்தான் கவுன்சிலர் இப்படிச் செய்ததாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.