தலைநகர் டெல்லியின் இதயம் போன்ற கன்னாட் பிளேஸ் பகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தின் போது வெடித்த பயங்கர வன்முறை, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, திரண்டிருந்த கும்பல் திடீரென வன்முறையில் இறங்கியதோடு, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரையே குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கன்னாட் பிளேஸ் உதவி காவல் ஆணையர் விவேக் பகத், சம்பவம் நடந்த இடத்தில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சியளிக்கும் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தமக்கு நேர்ந்த அனுபவம் குறித்துப் பேசிய ஏசிபி விவேக் பகத், “புதன்கிழமை மாலை பணி மாற்றத்தின் போது, கன்னாட் பிளேஸின் ரீகல் கட்டிடத்தில் இருந்து நாடாளுமன்ற வீதி மற்றும் டால்ஸ்டாய் மார்க் சந்திப்பை நோக்கி எனது ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு கூடி இருந்த கும்பல், காவல் துறைக்கு எதிராக முழக்கமிட்டபடி திடீரென குடிநீர் பாட்டில்களை வீசி எறியத் தொடங்கியது. வன்முறையாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அங்குமிங்குமாக நகர்ந்தனர். அப்போது, பாதுகாப்புப் படை ஊழியர் ஒருவரைச் சூழ்ந்துகொண்ட வன்முறைக் கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கியது. இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்து முகம் முழுவதும் ரத்த வெள்ளமாக மாறியது” என்று விவரித்தார்.
சக காவலரின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசிபி விவேக் பகத், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவரை மீட்க முயன்றுள்ளார். ஆனால், வெறிமுற்றிய கும்பல் ஏசிபி விவேக் பகத்தையும், அவருடன் இருந்த நன்னடத்தை ஏசிபி ரோஹித் ஆகியோரையும் நாலாபுறமும் சூழ்ந்துகொண்டது. காவல்துறையினரிடம் இருந்த லத்திகளையே பறித்து, அவர்களைக் கொண்டே காவலர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். காவலர்களைத் தனியாகப் பிரித்து, குறிவைத்துத் தாக்குவதையே அக்கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஏசிபி விவேக் பகத் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து போனார்.
வன்முறைக் கும்பலிடம் சிக்கித் தவித்த காவல் அதிகாரிகளை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரைவு அதிரடிப் படை வீரர்கள் தீவிர முயற்சிக்குப் பிறகு கலவரக்காரர்களிடம் இருந்து மீட்டனர். கல்வீச்சுக்கு நடுவே மீட்கப்பட்ட ஏசிபி விவேக் பகத், உடனடியாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியின் பிரதான வணிக மையத்தில் உயர் காவல் அதிகாரிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
