இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரில் வாழ்க்கைச் செலவு எந்த அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல்   பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆயுஷ் தாக்கூர் என்ற இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வார இறுதியில் எந்தவிதமான பார்ட்டிகளுக்கோ அல்லது சுற்றுலாத் தலங்களுக்கோ செல்லாதபோதிலும், தனது மாதச் செலவு ₹74,000-ஐ எட்டுகிறது என அவர் வெளியிட்ட கணக்கு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள செலவுப் பட்டியலில், வீட்டின் வாடகைக்காக ₹18,000, சமையல் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்காக ₹3,000, மின்சாரம் மற்றும் வைஃபை கட்டணத்திற்காக ₹1,000 ஒதுக்கப்படுகிறது. அலுவலகத்திற்குச் செல்ல நிறுவனத்தின் வாகன வசதியும், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுவதால் போக்குவரத்து மற்றும் உணவுச் செலவுகள் மிச்சமாகின்றன. இருப்பினும், வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சிக்கான புரோட்டீன் சப்ளிமெண்ட்டுகளுக்கு ₹12,000, நள்ளிரவில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பிற தேவைகளுக்கு ₹10,000 என அத்தியாவசியப் பொருட்களுக்கே கணிசமான தொகை செலவாகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ayush Thakur (@the.wandering.dataset)

இந்த பட்ஜெட்டின் மிகவும் முக்கியமான அம்சமாக அவரது சேமிப்புப் பழக்கம் பார்க்கப்படுகிறது. தனது மொத்த மாதச் செலவில், முறையான திட்டமிடலோடு மியூச்சுவல் ஃபண்ட்  மற்றும் பிற முதலீடுகளுக்காகவே மாதம் ₹30,000 ஒதுக்குகிறார். “வங்கிச் கணக்கில் சும்மா இருக்கும் பணத்தை நம்ப முடியாது; அது தானாகவே கரைந்துவிடும், அதனால் முதலீடு செய்வது மிக அவசியம்” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தாலும், இதுவே அவரது நிதி மேலாண்மையின் முக்கிய தூணாக உள்ளது.

இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெருநகரங்களில் தனியாக வாழ்வதே பெரும் செலவுதான் என்று ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்க, ₹30,000 முதலீட்டை ‘செலவு’ என்று கணக்கிடக் கூடாது, அது எதிர்காலச் சேமிப்பே என்று மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். “எனக்கு மாதச் செலவே ₹3 லட்சம் ஆகிறது” என்று சிலர் தங்களது அனுபவங்களைப் பகிர, “தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த இளைஞரின் நிதி மேலாண்மை பாராட்டுக்குரியது” எனப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.