உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில் பணம் மற்றும் அரசாங்க நஷ்டஈட்டுக்காகப் பெற்ற தாயையே ஈவுஇக்கறையின்றித் தீர்த்துக்கட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பியிரோ தேவி என்ற பெண் தனது மகன் பஹால் சிங் என்பவருடன் வழக்கம் போல் அருகில் உள்ள வயல்வெளிக்கு மாடுகளுக்குத் தேவையான தீவனம் சேகரிக்கச் சென்றவேளையில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தத் தனிமையான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பாவி மகன், தன் தாயின் கழுத்தை இறுக்கிப் படுகொலை செய்துவிட்டு, கிராம மக்களை நம்ப வைப்பதற்காக வனப்பகுதியில் நடமாடும் சிறுத்தை  தன் தாயைத் தாக்கிக் கொன்றுவிட்டதாகப் பொய் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான்.

தனது தாயைக் காப்பாற்ற முயன்றதாகக் கூறிப் பொய்யான அழுகைக் நாடகத்தைப் போட்ட அந்த நபர், அப்பகுதியில் நிலவி வந்த சிறுத்தை பயத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த கிராம மக்களையும் வனத்துறையினரையும் நம்ப வைப்பதில் வெற்றியும் பெற்றுள்ளான்.

வெறும் 5 லட்சம் ரூபாய் அரசாங்க நிவாரணத் தொகையைப் பெற்றுவிடுவதற்காகத் தான் இந்தத் திட்டமிட்ட நாடகத்தை அவன் அரங்கேற்றியுள்ளான். மக்களின் உதவியுடன் வனத்துறையினரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் நஷ்டஈட்டிற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் பெற்ற பிறகே இறுதிச் சடங்கிற்கான சடலத்தை எடுக்க அவர்கள் அனுமதித்துள்ளனர்.

ஆனால், காவல்துறையின் வழக்கமான விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகள் அந்தத் தாயின் கொலைக்குப் பின்னால் இருந்த கொடூர உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உடலின் எந்தப் பகுதியிலும் காட்டு விலங்கு தாக்கியதற்கான வடுக்கள் எதுவும் இல்லை என்றும், மூச்சுத் திணறடிக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டே அந்தப் பெண் கொல்லப்பட்டுள்ளார் என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் பண ஆசைக்காகத் தன் தாயைக் கொன்றதை அந்த மகன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசார் அவனைச் சிறையில் அடைத்துத் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.