இந்திய சமூகத்தில் திருமண நிகழ்வுகள் என்பது வெறும் இரு மனங்களின் இணைப்பு மட்டுமல்லாமல், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்காகப் பல குடும்பங்கள் தங்களது ஆயுள் கால சேமிப்ப முழுமையாகச் செலவிடுவதும், கடன் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையைச் சுட்டிக்காட்டும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த மீனால் கோயல் என்ற பெண் பட்டயக் கணக்காளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று, தற்போது இந்தியக் குடும்பங்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. “உறவினர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ₹20 லட்சம் வரை ஆடம்பரமாகச் செலவு செய்வது மிகப்பெரிய நிதி சார்ந்த தவறாகும்” என அவர் ஓபனாகத் தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள கணக்கீட்டின்படி, ஒரு சராசரி ஆடம்பரத் திருமணத்திற்கு ₹20 லட்சம் பட்ஜெட் ஒதுக்கப்பட்டால், அதில் உணவிற்காக ₹6 லட்சம், மண்டப வாடகைக்கு ₹5 லட்சம், அலங்காரத்திற்கு ₹3 லட்சம் செலவிடப்படுகிறது. மேலும், புகைப்படம் எடுப்பதற்கு ₹2 லட்சம், இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு ₹2 லட்சம், இதர செலவுகளுக்கு ₹2 லட்சம் எனத் தொகையானது மிகச் சில மணி நேரங்களிலேயே கரைகிறது. அடுத்த நாள் காலையிலேயே மண்டபம் ஒப்படைக்கப்பட்டு, உணவும் அலங்காரமும் முடிந்து, வந்த உறவினர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுகின்றனர்; ஆனால் குடும்பத்திற்கு எஞ்சுவது நிதி நெருக்கடி மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தொகையை அப்படியே ஆடம்பரமாகக் கரைப்பதற்குப் பதிலாக, புதுமணத் தம்பதிகளின் எதிர்காலத்தை உறுதி செய்யப் பயன்படுத்தலாம் என்பது அவரது கருத்தாகும். திருமணச் செலவைக் குறைத்து, எஞ்சிய பணத்தை சொந்த வீடு வாங்குவதற்கான முன்பணம் , அவசரகால நிதி, நீண்டகால முதலீடுகள் அல்லது குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்காகச் சேமித்து வைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். “திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம், அது குடும்பத்திற்கு நிதிச் சுமையாக மாறக்கூடாது. திருமணத்தை மட்டும் பிரம்மாண்டமாகக் கட்டியெழுப்பாமல், தம்பதிகளின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பத் திட்டமிடுங்கள்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வைரல் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வு என்பதால், தங்களுக்கு விருப்பமான முறையில் செலவழித்து நினைவுகளை உருவாக்குவதில் தவறில்லை என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதேவேளையில், ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்கிப் பந்தா செய்வதை விட, நடைமுறைக்குச் சாத்தியமான முறையில் எளிமையாகத் திருமணம் செய்து எதிர்காலத்தைச் சேமிப்பதுதான் புத்திசாலித்தனம் என மற்றொரு தரப்பினர் பலமாக ஆதரித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
