பள்ளிக் காலத்தில் தேர்வில் தோற்றுவிட்டால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற அச்சத்தில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. ஆனால், அவ்வாறு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுவன், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அதிகாரப்பூர்வ ஆவணச் சரிபார்ப்பின் மூலம் மீண்டும் தனது தாயையும் குடும்பத்தையும் கண்டடைந்த அபூர்வமான நெகிழ்ச்சிச் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் எம்மிக்கனூரு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் பெற்றோருக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறினான். மகனைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. காலம் நகர நகர, அந்த இளைஞன் வேறொரு பகுதியில் தங்கித் தனது வாழ்க்கையைத் தொடங்கி வசித்து வந்த போதிலும், தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்த ஏக்கம் அவனுள் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் விவரங்களைச் சரிபார்க்கும் ‘சீர்’ அமலில் உள்ளது. இதன்படி புதிய பகுதியில் வாக்காளராகப் பதிவு செய்ய அல்லது வாக்காளர் அடையாள அட்டையைப் புதுப்பிக்க, பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக, வேறு வழியின்றித் தனது பூர்வீக ஊரான எம்மிக்கனூருக்கு அந்த நபர் வருகை தர வேண்டிய சூழல் உருவானது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அதிகாரப்பூர்வ வாக்காளர் படிவத்தைச் சமர்ப்பித்துச் சரிபார்த்தபோது, நீண்ட நாட்களாக மகனுக்காக ஏங்கிக் கொண்டிருந்த தாயையும் குடும்பத்தினரையும் அவர் நேரில் சந்தித்தார். இத்தனை ஆண்டுகள் கழித்துத் காணாமல் போன மகன் உயிருடன் திரும்பி வந்ததைக் கண்ட தாய் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவரைத் தழுவிக்கொண்டனர். ஒரு சாதாரண வாக்காளர் சரிபார்ப்புப் படிவம், 30 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
