தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பிதற்றிக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு திட்டம் தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும், இதற்காக மாணவர்கள் தரப்பிலிருந்து எவ்வித கோரிக்கையும் எழாத நிலையிலேயே தானாக முன்வந்து அரசாணை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தற்போது இந்தத் திட்டத்தை திமுகவின் அழுத்தத்தால் கொண்டு வந்தது போல முதலமைச்சர் பொய் பிரச்சாரம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை கடன் சுமையில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளாக எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், ஆட்சி முடியும் தருவாயில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் விளம்பரம் தேடுவதும் மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் சாடியுள்ளார்.

மேலும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அதிமுக ஆட்சிக்கால திட்டங்களையே உருமாற்றி தற்போதைய அரசு தனது சாதனை போலக் காட்டி வருவதாகவும், முதலமைச்சர் பதவிக்கு அழகற்ற முறையில் தொடர்ந்து பொய்களைக் கூறி வருவதால் மக்களின் நம்பிக்கையை ஸ்டாலின் இழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பொய் பிம்பங்கள் விரைவில் வீழும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.