மகாராஷ்டிராவின் பிரபல மலைப்பிரதேசமான லோனாவாலாவில் அமைந்துள்ள ‘நோஸ்ட்ராவில்லா’  தனியார் சொகுசு வில்லா மற்றும் ரெசார்ட்டில் தங்கியிருந்த குடும்பத்தினரின் அறைக்குள் புகுந்த பாம்பு ஒன்று ஊழியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த விடுதியில் வனவிலங்கு நடமாட்டம் பொதுவானது என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்கியிருக்கும் அறைக்குள்ளேயே இதுபோன்ற கொடூரச் செயல்கள் அரங்கேறியது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Neha (@ordinary.mom174)

இந்தச் சம்பவத்தை நேஹா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டு தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் துளியும் குற்ற உணர்ச்சியின்றி இது வழக்கமான ஒன்றுதான் என்றும், குழந்தைகள் கூட்டி வந்திருக்கக் கூடாது என்றும் அலட்சியமாகப் பதிலளித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்தவிதமான மன்னிப்பும் கேட்காமல், “உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்” என்று தங்களை மிரட்டியதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் படி எந்தவொரு பாம்பு இனத்தையும் கொல்வது சட்டப்படி குற்றமாகும். விடுதி ஊழியர்களின் இந்தச் சட்டவிரோதச் செயலும், அதன் பிறகு அவர்கள் காட்டிய திமிர்த்தனமான அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வருவதுடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்துப் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.