புது தில்லியில் உள்ள மத்திய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களைப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தலுக்கான செலவு கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.92.35 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ரூ.27.47 கோடியாக இருந்த இந்த ஆண்டுச் செலவு, தற்போது மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய பொதுப்பணித் துறை மூலமாக 2014-15 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் அமைச்சர்களின் பங்களா பராமரிப்பிற்காக மட்டும் மொத்தம் ரூ.547.68 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த லூட்டியன்ஸ் பங்களாக்கள் கிட்டத்தட்ட 80 முதல் 100 ஆண்டுகள் பழமையானவை என்பதால், அவற்றின் கட்டமைப்புப் பாதுகாப்பு, தேய்மானம், கரையான் பாதிப்பு மற்றும் நீர் கசிவு போன்ற பராமரிப்புச் சவால்களே செலவு அதிகரிப்பிற்குக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் 1912 முதல் 1930 காலகட்டத்திற்குள் உருவாக்கப்பட்ட இந்தப் பங்களா மண்டலத்தில், தற்போது மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வசித்து வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் உள்ள சுமார் 70 முதல் 72 அமைச்சர்களைக் கணக்கில் கொண்டால், கடந்த நிதியாண்டில் ஒரு அமைச்சரின் இல்லப் பராமரிப்பிற்குச் சராசரியாக ரூ.1.2 கோடி வரை செலவாகியுள்ளது.
கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக ரூ.26.78 கோடியாக இருந்த பராமரிப்புச் செலவு, 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக ரூ.50 கோடியாக இரட்டிப்பானது. இதன் தொடர்ச்சியாக 2024-25 நிதியாண்டில் ரூ.71.98 கோடியாக உயர்ந்த செலவினம், கடந்த ஆண்டில் ரூ.92.35 கோடியைத் தொட்டுள்ளது.
வழக்கமாக மின்விசிறிகள், எல்இடி விளக்குகள் போன்ற மின்சாரப் பொருட்கள், குழாய் பழுதுபார்ப்பு மற்றும் தரை ஓடுகள் மாற்றுவது போன்ற பணிகளுக்காகவே பெரும்பாலான கோரிக்கைகள் பெறப்படுவதாகப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான பராமரிப்புச் செலவுகள் குறித்துத் தனியாக விவரங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், அமைச்சர்களின் பங்களா பராமரிப்புச் செலவு தொடர்ந்து உயர்ந்து வருவது கவனத்தைப் பெற்றுள்ளது.
