ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், உணவக ஊழியர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயமடைந்தனர்.

 

விபத்து நடந்த சமயத்தில் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அசைவ உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 15 பேர் இருந்த நிலையில், அருகில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட துளையிடும் வேலைகளால் ஏற்பட்ட அதிர்வுகளே கட்டிடம் பலவீனமடைந்து இடியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.