தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்-அட்சயா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அட்சயாவுக்குத் தனியார் நிறுவன ஊழியர் ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் குடும்பத்தில் பெரும் புயல் வீசியது. மனைவியின் இந்த நடத்தையை தர்மராஜ் கண்டித்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஓராண்டாகப் பிரிந்திருந்த இந்தத் தம்பதியினர், உறவினர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் பட்டுக்கோட்டையில் ஒரு வாடகை வீடு எடுத்து மீண்டும் இணைந்து வாழத் தொடங்கினர்.
ஆனால், புதிய வீட்டிலும் அட்சயா தனது கள்ளக்காதலைத் தொடர்ந்ததோடு, ஜோஸை வீட்டிற்கு வரவழைத்ததால் கடும் மனவேதனையடைந்த தர்மராஜ், தற்கொலைக்கு முன்பாகத் தனது சிறு வயது மகனை முன்னிறுத்தி, “அப்பா செத்துப்போயிட்டா பொழைச்சுக்குவியா?” என்று கண்ணீருடன் கேட்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், அந்த வீடியோவில் தனது குடும்பம் அழியக் காரணமான ஜோஸிற்கு காவல் துறை கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உருக்கமான வீடியோ பதிவுகளை இணையத்தில் பதிவிட்டுவிட்டு தர்மராஜ் விபரீத முடிவைத் தேடிக்கொண்ட நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழுத்து மற்றும் கன்னத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் அட்சயா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வந்த காவல் துறையினரிடம், “மது போதையில் என் கணவர் என்னைக் கத்தியால் கிழித்துவிட்டார்” என்று அட்சயா வாக்குமூலம் அளித்துள்ள சூழலில், தர்மராஜ் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமல் போன குழந்தை மற்றும் தர்மராஜ் ஆகியோரை தற்போது போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
