கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது மகளின் தோழியைச் சந்தித்துள்ளார். அவரிடம், “என் மகள் கல்லூரிக்குச் சென்றுவிட்டாள், நீ ஏன் செல்லவில்லை?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தத் தோழி, “கல்லூரி வரும் 10-ஆம் தேதிதானே திறக்கிறது” என்று கூறவே, தந்தை அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மகளின் செல்போனுக்கு அவர் தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மகள் கல்லூரி திறப்பதற்கு முன்பே பொய் சொல்லிவிட்டுச் சென்றதால் பதற்றமடைந்த தந்தை, வீட்டிற்கு வந்து மகளின் அறையைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அங்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “நான் ஒருவரைக் காதலித்து வருகிறேன், அவருடன் செல்கிறேன்; எனவே என்னை யாரும் தேட வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், காதலனுடன் சென்ற கல்லூரி மாணவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
