மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரை (30), கலைச்செல்வி (27) தம்பதியரின் 9 மாதக் குழந்தை கடந்த மாதம் 8-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விட்டல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து இறக்கவில்லை என்பதும், அது தண்ணீரில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சிகரமாக அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாண்டிதுரை, அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கலைச்செல்வியுடன் சேர்ந்து குழந்தையைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையையே கொடூரமாகக் கொலை செய்த தம்பதியர் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.