தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் கட்சித் தலைவர் விஜய் யாரைக் கைகாட்டுகிறாரோ, அவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவர் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் த.வெ.க.வின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்கனவே இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துள்ள நிலையில், மக்கள் இப்போது மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தலைவர் விஜய்யின் உரையும், அவரது இலக்கும் தமிழகத்தைச் சிறந்த மாநிலமாக மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

த.வெ.க.வுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் தமிழகம் வந்து வாக்களிக்கத் தயாராக உள்ளனர். தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. முருகன் பக்திப் பாடலுக்கு விஜய் நடனமாடியதை விமர்சிப்பவர்கள், மற்ற அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதில்லை. அதேபோல், விஜய் கருப்புப் பணம் வாங்குவதாகக் கூறும் திண்டுக்கல் சீனிவாசன், அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரமின்றிப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்க உள்ளேன். எப்போதுமே விஜய்யுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகிறேன்.  த.வெ.க. தனித்துப் போட்டியிடுவது குறித்து இப்போதே கூற முடியாது. ‘மவுனம் வெற்றிக்கு அறிகுறி’. உரிய நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி த.வெ.க.வால் பாதிக்கப்படாது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்த கேள்விக்கு, “2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, யார் யாரைக் கண்டு அச்சப்படுகிறார்கள், யாருடைய வாக்கு வங்கி சரிந்தது என்பது வெட்டவெளிச்சமாகும்” என்று அவர் பதிலளித்தார்.