திமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றும், கூட்டணி அமைப்பதில் திமுகவுக்கு எனத் தனித்துவமான பாரம்பரியம் உள்ளது என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துக் கூறியதாவது: திமுக இதுவரையில் கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவார்த்தையையும் தொடங்கவில்லை. திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாகக் கூறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் அரசியல் வரலாறு தெரியாதவர்கள். பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே கூட்டணி அமைப்பதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதிலும் திமுக முறையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது.
முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கென ஒரு குழு அமைக்கப்படும். அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெற்றியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு அடியையும் திமுக நிதானமாக எடுத்து வைக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் அவசரக் கோலத்தில் செயல்பட்டு வருகின்றன.”காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திதான். இதை நாங்கள் சொல்லவில்லை, காங்கிரஸ் கட்சித் தலைவர்களே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டனர்.”
“பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக மக்களவைத் துணை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. முறைப்படி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அந்தப் பதவியை வழங்காமல், ஜனநாயகத்திற்கு எதிராக மோடி செயல்படுகிறார்.” மேலும் தமிழக வெற்றி கழகம் என்பது இன்னும் ‘அசெம்பிள்’ ஆகாத ஒரு என்ஜின் போன்றது. ஒரு என்ஜின் இயங்க அதன் பாகங்கள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும். இதுவரை முழுமையடையாத ஒரு அமைப்பிற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
