தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்கள் குறித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியுள்ள கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் நல்ல பாடமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மிக விரைவில் ஒரு பெரிய மாற்றம் வரும் என்று சூசகமாகத் தெரிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜய்யின் வெற்றி ஒரு அதிசயம் என்றும், இந்த அதிசயத்தால் பலவீனமானவர்கள் பலியாகிவிட்டார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

​இதற்கிடையே, தேர்தல் முடிந்ததும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சண்முகம் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ். பாரதி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன உலகமகா தவறா? அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத சக்தி அல்ல, அவர்கள் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எங்கள் பங்காளி போன்றவர்கள்” என்று ஆர்.எஸ். பாரதி தாராளமாகப் பேசியுள்ளார்.

தாங்கள் தற்போது கூட்டணி பேசவில்லை என்றாலும், காலம் கனிந்துவிட்டதால் சட்டமன்றத்தில் இரு கட்சியினரும் ஒரே வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொண்டர்கள் பார்ப்பதற்கு இரு கட்சிகளும் இணைந்துவிட்டது போலவே தோன்றுவதாகவும், இதற்கு கம்யூனிஸ்டுகளே காரணம் என்றும் கலகலப்பாகக் கூறி புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.