தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான விளக்கமளித்துள்ளார். “தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டது என்று கூறுபவர்களுக்கு, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது தகுந்த ஆதாரங்களுடன் சரியான இடத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்” என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

தவெக அரசு அமைந்து இன்னும் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், 30 நாட்களுக்குள் தொழில் முதலீடு மாநிலத்தை விட்டுச் சென்றுவிடாது என்றும், முந்தைய ஆட்சியில் நடைமுறைகள் சரியாக நடக்காத காரணத்தால்தான் அவர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் கீர்த்தனா, “அவர் இன்னும் தானே தொழில்துறை அமைச்சர் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் உங்களை வேண்டாம் என்றுதான் வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள், தயவுசெய்து அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் பண்ணையார்தனத்தை விட்டுவிடுங்கள்” என்று சாடியுள்ளார்.

தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதால் தங்களுக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, அதற்கான தொலைநோக்குப் பார்வை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் புதிய திட்டங்கள் மக்கள் பார்வைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.