தமிழக வெற்றி கழகத்தினர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தால் அதற்குரிய பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், தனது கருத்தை மாற்றிக்கொள்ளும் நபர் தான் அல்ல என்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய் குறித்து முதல் நாளில் என்ன கருத்து சொன்னேனோ, அதையேதான் இன்றும் சொல்கிறேன். அரசியலுக்குப் புதியவர்கள் வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக நான் எனது நிலப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். விஜய் நாகரிகமான அரசியல் என்று குறிப்பிட்டிருப்பதால், நானும் நாகரிகமான முறையிலேயே பதில் அளிக்கிறேன். அவரது பாதையில் அவர் செல்லட்டும்.”
திமுகவினர் விமர்சிப்பது போல ‘டப்பா என்ஜின்’ என்ற கருத்துக்கு நான் ஏற்கனவே பதிலடி கொடுத்துவிட்டேன். ஆனால், தவெக தலைவரோ அல்லது அக்கட்சியில் உள்ள ‘அல்லு சில்லுகளோ’ தேவையின்றி எங்களை வம்புக்கு இழுத்தால், எனது பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும். நான்கு கட்சி மாறி வந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்துக்கொண்டு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தால், அவர்களை விடச் சிறப்பாக அதே பாணியில் பதில் சொல்ல எனக்குத் தெரியும். இதனை தவெகவினர் ஓர் எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளட்டும்.”
தமிழக வாக்காளர்கள் வரும் ஏப்ரல் மாதத் தேர்தலில் தங்களது எண்ணத்தைப் பிரதிபலிப்பார்கள். அதுவரை பொறுத்திருப்போம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம்.” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
