தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் எதிர்கால நலன் கருதி கூட்டணி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கூறியதாவது, தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளோம். கட்சி நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வரவிருக்கும் தேர்தலில் தேமுதிக ஒரு மகத்தான கூட்டணியை அமைக்கும்.
மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே தேமுதிகவைப் பொறுத்தவரை தோழமை கட்சிகள்தான். அண்மையில் நடைபெற்ற ‘கேப்டன்’ விஜயகாந்தின் குருபூஜை நிகழ்வில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தியது அதற்குச் சான்று. நட்பு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசியல் முடிவுகளைப் பொறுத்தவரை கட்சியின் விருப்பமும், தொண்டர்களின் நலனுமே முதன்மையானது. கட்சியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் சிறந்த முடிவை உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.
