கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள செங்கோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது இன்ஜினியர் அபிஷ், புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் வேலை பார்த்து வந்த அபிஷிற்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், இந்த உண்மையை மறைத்து அந்தப் பெண்ணுடன் பழகிய அபிஷ், அவரைத் தீவிரமாகக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்தப் பெண்ணைத் திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அந்தப் பெண் நான்கு மாத கர்ப்பமான நிலையில், அபிஷிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட அதிர்ச்சித் தகவல் அவருக்குத் தெரியவந்தது.

இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியபோது, அபிஷ் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இன்ஜினியர் அபிஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.