சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை எம்.பி. எ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த யுவஸ்ரீ என்ற மாணவி, சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று பாலத்தின் அருகே தனது பையை விட்டுச் சென்ற மாணவி, திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், மாணவியின் உடல் மெரினா கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உருக்கமான கடிதத்தில், “எனக்கு வாழப் பிடிக்கவில்லை, எனது முடிவிற்கு யாரும் காரணமல்ல, பெற்றோரும் சகோதரியும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று எழுதியிருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபரீத முடிவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்குக் காதல் தோல்வி காரணமா, குடும்பப் பிரச்சினையா அல்லது கல்வி தொடர்பான மன அழுத்தமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவியின் செல்போன் அழைப்புகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை ஆய்வு செய்து வரும் போலீசார், அவரது தோழிகள் மற்றும் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு இளம் பட்டதாரி மாணவி தனது எதிர்காலத்தை விடுத்து இத்தகைய விபரீத முடிவை எடுத்திருப்பது கல்வி வட்டாரத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
