கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, திருமணமான தகவலை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அபிஷ் (30) என்ற இளைஞர், ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், அவரது மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதையும் மறைத்து, புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை கன்னியாகுமரிக்கு வரவழைத்த அபிஷ், பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த இளம்பெண் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அபிஷிற்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது அபிஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அபிஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏமாற்றப்பட்ட இளம்பெண்ணின் இந்த நிலை அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
