திருச்சி பாலன் நகர் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பான முன்விரோதத்தில் பெயிண்டர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலன் நகரைச் சேர்ந்த சந்துரு (26) என்ற இளைஞர், நேற்று இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் பலத்த காயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்துருவின் தங்கையை புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் காதலித்து வந்ததும், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.

அந்த மரணம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, உயிரிழந்த காதலனின் தம்பியும் அவரது நண்பரும் சேர்ந்து சந்துருவை பழிவாங்கிக் கொலை செய்தது அம்பலமானது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.