சென்னை பெருங்களத்தூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த தனஞ்செயன் என்பவரது மகள் யுவஸ்ரீ (25). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்திற்கு வந்த யுவஸ்ரீ, திடீரென கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், அண்ணா சதுக்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பாலத்தில் கண்டெடுக்கப்பட்ட யுவஸ்ரீயின் பையில் இருந்த உருக்கமான கடிதத்தில், “எனக்கு வாழப் பிடிக்கவில்லை; எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை, பெற்றோரும் சகோதரியும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாயமான மாணவியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மெரினா கடற்கரை முகத்துவாரம் அருகே யுவஸ்ரீயின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினையா அல்லது கல்லூரிப் படிப்பில் ஏதேனும் அழுத்தமா என்பது குறித்து அவரது செல்போன் சாட்கள் மற்றும் அழைப்புகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.