சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவு போதையில் வீட்டுக்கு வந்த சத்யராஜ், மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், அங்கிருந்த வயரை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மது போதையில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத சத்யராஜ், கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். அதிகாலையில் போதை தெளிந்த பிறகு தான், மனைவி சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பயத்தில் அங்கிருந்து தப்பியோடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போரூர் போலீஸார், ரோஸ்மேரியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த கொலையாளி சத்யராஜை அதிரடியாகக் கைது செய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். சந்தேகப் பேயால் ஒரு குடும்பமே சீரழிந்த இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.