ஈரோட்டில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்த நிலையில், திமுக ஒரு தீய சக்தி என கூறியிருந்தார். இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தீய சக்திகளிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சமீபத்தில் பேசியிருந்தார். இந்த சூழலில், திருப்பூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஒரு தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம். இதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். பாஜகவும் நீண்ட காலமாக இதை வலியுறுத்தி வருகிறது. இதை யாரோ ஒருவர் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சாதாரண வீட்டு பெண்மணிகளே திமுகவை தீய சக்தி என கூறுவதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். இதை நான் மிகவும் முக்கியமான கருத்தாக பார்க்கிறேன். அடித்தட்டு மக்களிடையே கூட திமுக குறித்து இதே மனநிலை உள்ளது.
மேலும் இந்த கருத்து வரும் தேர்தலில் வாக்குப்பெட்டியில் வெளிப்படும். ‘தீய சக்தி’ என்ற வார்த்தை திமுகவின் அடையாளமாக மாறியுள்ளது. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
