சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதிமுக, சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அரசியலில் சிலர் தலைமுறை தலைமுறையாக பதவிகளை அனுபவித்து வருகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து போதித்த போதனைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. இயேசு கிறிஸ்து தீய சக்திகளை அழிக்க உலகிற்கு ஒளியாக வந்தார். தீய சக்திகளாக இருப்பவர்கள் ஒளியின் வேஷம் தரித்து வருவார்கள் என்றும், அவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஒரு குட்டிக்கதையை எடுத்துரைத்த எடப்பாடி பழனிசாமி, ஆட்டுத்தோலை போர்த்தி வரும் ஓநாய்களைப் போல சிலர் மக்களிடம் நெருங்கி வருவதாக கூறினார். இத்தகையோரிடம் சிறுபான்மை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தீய சக்திகளிடம் ஏமாந்துவிட்டால் விடியல் என்பதே இருக்காது என்றார். மேலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக ஒரு போராடும் இயக்கமாக தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
