த.வெ.க. தலைவர் விஜய், தொடக்கத்தில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த நிலையில், சமீபகாலமாக அதிமுகவையும் மறைமுகமாக விமர்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “அண்ணா, எம்.ஜி.ஆர். பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல உரிமை இல்லை. அவர்கள் தமிழகத்தின் சொத்து. அதிமுகவைச் சேர்ந்த செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது நமக்கு பெரிய பலம். அவரைப்போல் இன்னும் பலர் இணைவார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

விஜயின் இந்த பேச்சு, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தன்னை பெருமைப்படுத்தவும், கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் சிலர் இவ்வாறு கருத்துகளை தெரிவிப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதே கருத்தை செங்கோட்டையனும் கூறி வருகிறார். ஆனால் இதுவரை யாராவது த.வெ.க.வில் சேர்ந்தார்களா? அவரை நம்பி யாரும் செல்லவில்லை.

இனிமேலும் யாரும் சேர மாட்டார்கள். பாதை தவறி சென்றவர்களால் சரியான அரசியல் பாதையை உருவாக்க முடியாது. கரூர் சம்பவத்துக்கு முன் விஜய் பேசிய கருத்துகளுக்கும், அதன் பின்பு அவர் பேசிய கருத்துகளுக்கும் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. தொண்டர்களின் நம்பிக்கையை பெறவே தற்போது கவனமாக பேசப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.