ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், தம்பதியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த தம்பதியினர், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது சாலையோரத்தில் மது போதையில் இருந்த 4 இளைஞர்கள், தம்பதியரை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் திடீரென அந்த இளைஞர்கள், கணவரை தாக்கி, அவரது மனைவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அலறியடித்து அங்கிருந்து தப்பி ஓடி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்று உதவி கோரினார். இதற்கிடையில் அங்கிருந்து தப்பியோட முயன்ற 4 இளைஞர்களில் 3 பேர் தப்பியோடிய நிலையில், ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட தம்பதியரை போலீசார் மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.