நடிகர் தாடி பாலஜி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், முன்னதாக அறிவித்தபடி இம்மாதம் புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். ‘லட்சிய ஜனநாயக கட்சி’ எனப் பெயரிடப்பட்ட இந்தக் கட்சியின் கொடி கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் தாடி பாலஜி அக்கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக அவர் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருந்தார். தவெக தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட தாடி பாலஜி, கட்சிக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார்.
எனினும், கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படாததால் அவர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தவெக குறித்து விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், விஜய் பாணியில் புதுச்சேரியை மையமாகக் கொண்டு அரசியல் கட்சி தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் தாடி பாலஜி இணைந்துள்ளார். தாடி பாலஜி, தனது நெஞ்சில் நடிகர் விஜயின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வாசகத்துடன் நடிகர் விஜயின் புகைப்படத்தை அவர் பச்சை குத்தி இருந்த நிலையில் தற்போது அவர் வேறு கட்சியின் இணைந்ததால் அதனை அழிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
