மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே அன்பு, மனிதநேயத்தை வலியுறுத்துவதோடு, சமத்துவத்தை எல்லா நேரங்களிலும் அனைவரிடமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே கூறுகின்றன.
உலகில் அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களாலும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அவரது கருத்துகளையும் பின்பற்ற வேண்டும். இயேசுவின் வாழ்க்கையின் முக்கிய அம்சம் அவரது எளிமை. மக்களுக்கான தலைவர்கள் அரண்மனைகளில் மட்டுமே இருப்பார்கள் என்ற எண்ணத்தை தனது பிறப்பின் மூலம் இயேசு உடைத்தார்.
சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்களும் உழைப்பின் மூலம் உயர முடியும் என்பதைத்தான் திராவிட இயக்கம் வலியுறுத்துகிறது. அதற்கு இயேசு கிறிஸ்துவே எடுத்துக்காட்டு. அதுபோல பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோர் அனைவரும் மக்களோடு மக்களாக வளர்ந்தவர்கள். இரக்கம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும் என்பதே கிறிஸ்தவத்தின் முக்கிய கொள்கை. அதையே திராவிட இயக்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் மத்தியில் ஆட்சி செய்பவர்களிடம் இரக்க உணர்வைவிட வெறுப்பு உணர்வே அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள்மீது வெறுப்புணர்வு காட்டப்படுகிறது. மதம், மொழி, சாதி ஆகியவற்றின் பெயரில் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. ஏனெனில் தமிழ்நாடு தனித்துவமான மாநிலம்.
இயேசுவின் மற்றொரு முக்கிய கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் பகிர்வு என்றாலே மத்திய அரசுக்கு பிடிக்காது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் திமுக எப்போதும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
