வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலையில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தண்ணீர் ஓடையின் அருகே மூன்று யானைகள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளின் உடல்களைக் கண்டெடுத்தனர். நீண்ட நாட்களாக இறந்து கிடந்ததால் உடல்கள் முழுவதும் அழுகி, எலும்புக்கூடாக மாறி இருந்தன. தொடர்ச்சியாக யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருவதால், இது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மூன்று யானைகள் எவ்வாறு இறந்தன என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷப்பொருள் கலந்த நீர் அல்லது உணவு, மின் வேலி, அல்லது இயற்கை காரணங்கள் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல்கள் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால், மரணத்திற்கான சரியான காரணத்தை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, கால்நடை மருத்துவக் குழுவின் விரிவான பரிசோதனைக்கு பின்னரே யானைகள் உயிரிழந்ததற்கான உண்மை காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
