ஸ்கூட்டரில் பின்னோக்கி அமர்ந்திருந்த சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், பக்கத்து ஸ்கூட்டரில் பிங்க் நிற உடையில் அமர்ந்திருந்த சிறுமியைப் பார்த்ததும் அப்படியே சொக்கிப் போய், அவளை நோக்கிக் கைகளை நீட்டித் தனது மழலைக் காதலை வெளிப்படுத்த முயன்ற கியூட்டான வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

ஆனால், அந்த அழகான தருணத்தைக் கெடுப்பது போல், திடீரென பின்னால் வந்த வாகனத்தின் பலத்த ஹார்ன் சத்தம் கேட்க, பயந்துபோன அந்தச் சிறுவன் காதலில் விழுந்த வேகத்தில் அப்படியே செம்ம கடுப்பாகி, முகத்தை அஷ்டகோணலாக மாற்றித் தனது உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்.

இந்த வீடியோ ‘X’ தளத்தில் “அந்தச் சிறுவனுக்கு நியாயம் வேண்டும்” என்ற கேப்ஷனுடன் வெளியாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது. ​இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதமே கிளம்பியுள்ளது.

வீடியோவில் உள்ள சிறுவனின் அதீத முகபாவனைகளையும், பின்னணியையும் உற்றுப் பார்த்த பல பயனர்கள், இது நிஜமான வீடியோ அல்ல, முழுக்க முழுக்க ஏஐ (AI-Generated) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று கமெண்ட் பாக்ஸில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது உண்மையானதா இல்லையா என்ற தொழில்நுட்ப விவாதம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் அந்தச் சிறுவனின் கியூட்டான ரியாக்ஷனை மட்டும் ரசித்து, சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.