மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்குள் நுழைந்த அமைச்சர், அங்கே டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் செய்வதற்காகக் காத்திருந்த பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, “யாராச்சும் உங்ககிட்ட டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் பண்ண லஞ்சம் கேட்டாங்களா? நான் அமைச்சர் தான், யாராச்சும் எதுனா கேட்டு இருந்தா என்கிட்ட தைரியமா சொல்லுங்க” என்று ஓப்பனாகக் கேட்டு அங்கிருந்த அதிகாரிகளுக்கே அதிரடி அதிர்ச்சி கொடுத்தார்.

​பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் அலுவலகத்தில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது தவறுகள் நடக்கிறதா என்று ஒவ்வொன்றாகக் கேட்டறிந்த அமைச்சர், லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அமைச்சரே நேரடியாகப் பொதுமக்களிடம் வந்து லஞ்சம் குறித்து தைரியமாகப் பேசச் சொல்லி விசாரித்த இந்தச் சம்பவத்தின் வீடியோ, தற்போது ‘X’ (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி செம்ம வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த அதிரடி ஆக்ஷனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.