நடந்து முடிந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், யாரும் எதிர்பாராத விதமாக 237 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் 72 சிக்ஸர்களுடன் 776 ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு கேப்’ வென்ற 15 வயது இளம் புயல் வைபவ் சூரியவன்ஷியை, உலகிலேயே மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டையர் குக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
‘தி ஓவர்லேப்’ கிரிக்கெட் பாட்காஸ்ட்டில் பேசிய குக், “அவனுடைய ஆட்டத்தில் எந்தவித முன் தயாரிப்பும் தெரிவதில்லை; 99 மைல் வேகத்தில் வரும் பந்தைக் கூட மிக அசால்ட்டாக சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறான், இது வேறு எந்த பேட்ஸ்மேனிடமும் இல்லாத தனித்துவமான திறமை” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு இங்கிலாந்து முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனும் வைபவின் அசாத்தியமான பேட்டிங் ஸ்டைலைப் பார்த்து மிரண்டு போயுள்ளார். மும்பையில் வைபவை நேரில் சந்தித்து, போட்டிகளுக்கு எப்படி தயாராகிறாய், என்ன டயட் ஃபாலோ பண்ணுகிறாய் என்று கேட்டபோது, “நான் ஜாலியாக கார்ட்டூன் பார்ப்பேன், நினைச்சதை எல்லாம் சாப்பிடுவேன், அப்புறம் மேட்ச்ல சிக்ஸர் அடிப்பேன்” என்று வைபவ் கொடுத்த கூலான பதில் வாகனை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
ஐபிஎல்-லில் ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி, அடுத்து இலங்கையில் நடக்கும் இந்தியா ‘ஏ’ முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ள நிலையில், விரைவில் இந்திய சீனியர் அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கும் அவர் தேர்வு செய்யப்படலாம் என பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
