ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணி என்பது குறைந்த வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளையும், குறிப்பாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் @shivamworldbit என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் உணவு டெலிவரி ஊழியர் ஒருவரிடம் நபர் ஒருவர் அவரது வருமானம் குறித்துக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த ஊழியர், தனது மொபைல் செயலியைத் திறந்து முதலில் ஒரு நாள் வருமானத்தையும், பின்னர் ஒரு வார வருமானத்தையும் காட்டுகிறார். இறுதியாக, அவர் தனது முழு மாத வருமானத்தைக் காட்டியபோது அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.
12 घंटे की मेहनत… और कमाई देखकर मैं 10 सेकंड तक चुप रहा। pic.twitter.com/Eb6yz2HISR
— Shivam (@shivamworldbit) June 4, 2026
அவரது மொபைல் திரையின்படி, அந்த டெலிவரி ஊழியரின் ஒரு மாத வருமானம் தோராயமாக 66 ஆயிரம் ரூபாய் எனப் பதிவாகியிருந்தது. இதனை ஆண்டு வருமானமாகக் கணக்கிட்டால் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை வருகிறது. இது பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஆரம்பக்கட்ட கார்ப்பரேட் ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாகும். இந்த வீடியோவில் உள்ள மற்றொரு டெலிவரி ஊழியர், தான் அடுத்த மாதத்தில் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக் காட்டுவேன் எனத் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சவால் விடுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தங்களை ‘கார்ப்பரேட் அடிமைகள்’ என்று கூறிக்கொள்ளும் நெட்டிசன்கள் பலர், “நாம் ஏன் ஐடி வேலையை விட்டுவிட்டு இந்த வேலைக்கு மாறக்கூடாது?” என நகைச்சுவையாகவும், ஆச்சரியத்துடனும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
