இணையத்தில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 39 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு மிகக் கடினமான யோகாசனங்களைச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவில் யோகா ஆசிரியையாகப் பணிபுரியும் சஷி பிரபா திவேதி என்ற அந்தப் பெண், தனது பிரசவத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பட்டுப்புடவை அணிந்து கொண்டு எவ்வித சிரமமும் இன்றி ‘சக்ராசனம்’ போன்ற கடினமான ஆசனங்களைச் செய்கிறார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், கர்ப்ப காலத்தில் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்வது சரியா தவறா என்ற புதிய விவாதத்தையும் நெட்டிசன்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் இரு பிரிவாகப் பிரிந்து சமூக வலைத்தளங்களில் காரசாரமாக மோதி வருகின்றனர். விமர்சகர்கள் பலர், “வெறும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக பிரசவ காலத்தில் இப்படிச் செய்வது குழந்தையின் உயிருக்கே ஆபத்தானது, இது மிகப்பெரிய அலட்சியம்” என்று குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம் அவரது ஆதரவாளர்களோ, “இது ஒரு தாயின் உடல் வலிமையைக் காட்டுகிறது, உடல் ஒத்துழைத்தால் யோகா செய்வதில் தவறில்லை” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள சஷி பிரபா, “இது எனது பல ஆண்டுகால பயிற்சி மற்றும் உழைப்பிற்கு கிடைத்த பலன்; நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இதைச் செய்யவில்லை, இதுவே எனது வாழ்வியல் முறை என்று கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு பெண்ணின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், தனது வீடியோவைப் பார்த்து யாரும் இதனைப் பின்பற்ற வேண்டாம் என்றும், எந்தவொரு பயிற்சியையும் செய்யும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
