கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பிரபல உடற்பயிற்சி கூடம் (Gym) ஒன்று, இனிவரும் நாட்களில் ‘இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட’ ஜிம்மாக மாற்றப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “இந்த ஜிம் இனி இஸ்லாமிய விதிகளின்படி நடத்தப்படும். உடற்பயிற்சியின் போது பாடல்கள் ஒளிரவிடப்பட மாட்டாது.

இஸ்லாமிய போதனைகளின்படி ‘ஆரத்’ (Awrah) எனப்படும் மறைக்கப்பட வேண்டிய உடற்பகுதிகள் உடற்பயிற்சியின் போது கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகப் பயிற்சி நேரங்கள் ஒதுக்கப்படும்; இருபாலாரும் இணைந்து பயிற்சி பெற அனுமதி இல்லை என்று பல புதிய கட்டுப்பாடுகளைப் பட்டியலிட்டுள்ளார். மேலும், பெண்கள் ஹிஜாப் அணிந்து வர வேண்டும் என்றும், இந்த பகுதியில் இஸ்லாமிய மதிப்புகளைப் பின்பற்றி உருவாக்கப்படும் முதல் ஜிம் இதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுப்பாடுகள் ஒருபுறமிருக்க, இந்த ஜிம்மில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இணையலாம் என்றும், ஆனால் ஜிம்மின் விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உரிமையாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளது. ஆதரவாளர்கள் சிலர், “இது ஒரு தனியார் நிறுவனம் என்பதால், இந்திய சட்டங்களை மீறாதவரை தங்களுக்கு விருப்பமான வாடிக்கையாளர்களைக் கவர விதிகளை உருவாக்க அவர்களுக்கு உரிமை உண்டு” என்று வாதிடுகின்றனர்.

ஆனால் விமர்சகர்களோ, “இது போன்ற நடவடிக்கைகள் சமூகத்தில் மத ரீதியான பிரிவினையை அதிகமாக்கும்; கேரளா தலிபான் கலாச்சாரத்தை நோக்கிச் செல்கிறதா?” என்று மிகக் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுவெளியில் இயங்கும் வணிக நிறுவனங்களில் மதக் கட்டுப்பாடுகளை புகுத்துவது குறித்தான இந்த விவாதம் தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.