தன் மகனின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், அவனுடன் முழு நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காக 10 வருடங்களாகத் தன்னிடம் வேலை பார்த்த கணக்காளர் (Accountant) ஒருவர் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அங்கித் பாண்டே எடுத்த மனிதாபிமான முடிவு இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.

“என் மகனின் பிழைப்புக்கே மருத்துவர்கள் மிகக் குறைந்த நம்பிக்கையே தந்துள்ளனர், அதனால் எஞ்சியிருக்கும் நாட்களை அவனுடன் கழிக்க விரும்புகிறேன்” என்று கண்ணீருடன் கூறிய ஊழியரிடம், “நீ வேலைக்கு வர வேண்டாம், உன் மகனைப் பார்த்துக்கொள்; ஆனால் உனக்கான சம்பளம் ஒவ்வொரு மாதமும் உன் அக்கவுண்ட்டில் வந்து சேரும்” என்று கூறி அங்கித் பாண்டே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கம்பெனி என்பது வெறும் வேலை பார்க்கும் இடம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பம் என்பதை இந்த முதலாளி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

​சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த ஊழியர் கையில் இனிப்புப் பெட்டியுடன், தன் மகன் பூரண குணமடைந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளார். மேலும், தான் வேலை செய்யாத நாட்களுக்கான சம்பளத்தைப் பிடித்துக் கொள்ளுமாறு அவர் நேர்மையுடன் வேண்டுகோள் விடுத்தபோது, “அது உனக்கான சம்பளம் அல்ல, உன் மகன் குணமடைய எங்கள் குடும்பம் தந்த சிறிய பங்களிப்பு” என முதலாளி மறுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

‘X’ (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட இந்த உருக்கமான பதிவு, வேலை செய்யும் இடங்களில் சக மனிதர்களிடம் காட்டும் அன்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக மாறி, லட்சக்கணக்கான நெட்டிசன்களின் பாராட்டுகளையும் சல்யூட்டுகளையும் அள்ளி வருகிறது.