தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாஜிப்பூரில் மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரைச் சிலர் பட்டப்பகலில் லத்தி மற்றும் கம்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பிறகு அவரை ஒரு கட்டிடத்தின் கூரையில் இருந்து கீழே தூக்கி எறிந்தனர்.

அத்துடன் நிற்காமல், அந்த நபரை வீதியில் இழுத்துச் சென்றதுடன், நாய்களைக் கொண்டும் கடிக்கச் செய்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்த பலரும் தங்கள் மொபைல் ஃபோன்களில் படம்பிடித்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“>

 

ஹாஜிப்பூரில் உள்ள ஒரு துணிக்கடையின் கண்ணாடியை அந்த நபர் உடைத்ததால், அந்தக் கடையின் ஊழியர்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஹாஜிப்பூரைச் சேர்ந்த ரோஷன் குமார் என்றும், அவர் மனநலம் குன்றியவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த ரோஷன் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்குப் பின் சந்தையில் கூரிய ஆயுதத்துடன் அத்துமீறலில் ஈடுபட்டதாக உள்ளூர் மக்கள் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் உள்ளூர் மக்கள் அவரைத் தாக்கியதாகவும் சுபோத் குமார் தெரிவித்துள்ளார். இருப்பினும், புகார் பெறப்பட்டதன் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.