பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூடிய முதல் கூட்டத்தொடரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விபா தேவி, பிரமாணப் பத்திரத்தை வாசிப்பதில் சிரமம் எதிர்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவாடா தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கௌஷல் யாதவை 27,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்ற விபா தேவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் பல்லப் யாதவின் மனைவி ஆவார்.

கூட்டத்தொடரின் போது, அவர் அருகில் இருந்த சக சட்டமன்ற உறுப்பினரிடம் பிரமாணப் பத்திரத்தின் வாசகங்களைத் தனக்கு உச்சரித்துக் கூறுமாறு கேட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையில், சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் நரேந்திர நாராயண் யாதவின் உரைக்குப் பிறகு, முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், சட்டமன்றத்தில் இக்கூட்டணி நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம்  85 இடங்கள், லோக் ஜனசக்தி கட்சி 19 இடங்கள் எனப் பெற்றுள்ளன. மகாகத்பந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியது. புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.