அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகமாக எட்டப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்து போனதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் முழு வீச்சில் தாக்குதலில் இறங்கியுள்ளன. உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ள இந்த மோதல் தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், ஈரானுக்கு எதிரான தங்களது தாக்குதல் இன்னும் ஓயவில்லை என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உறுதிப்படுத்தியுள்ளார். “அமெரிக்கா தற்போது தாக்குதலை நிறுத்தினாலும் கூட, இந்தச் சேதத்தில் இருந்து ஈரான் மீண்டு வர 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகும். நாங்கள் இன்னும் தாக்குதலை முடிக்கவும் இல்லை; இப்போதைக்கு இங்கிருந்து வெளியேறப் போவதும் இல்லை” என்று டிரம்ப் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவத் திறனை முற்றிலுமாக முடக்குவதே தங்களின் நோக்கம் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. இதற்காக, ஈரானின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலின் அடுத்தகட்டமாக, நதான்ஸ் அணு மையம் அருகே மலைக்கு அடியில் அமைந்துள்ள “பிக்ஆக்ஸ் மலை” என்ற ரகசிய நிலத்தடி அணுசக்தி வளாகத்தை அமெரிக்கா குறி வைத்துள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பகுதி மீது விரைவில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதைத் தடுக்க ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் டிரம்ப் சவால் விடுத்துள்ளார். பொதுவாக இலக்குகளை முன்கூட்டியே அறிவிக்காத டிரம்ப், இம்முறை பகிரங்கமாக எச்சரித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

டிரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரானின் ராணுவத் தலைமையகம் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. தங்களது நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது போரின் அடுத்தகட்ட விரிவாக்கமாகவே கருதப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அமெரிக்கா மட்டுமின்றி அதன் கூட்டணி நாடுகளும் மிக மோசமான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் ராணுவம் எதிர்ச் சவால் விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.

இதற்கிடையே, இந்த மோதலின் எதிரொலியாக அண்டை நாடுகளிலும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாக்குதல் அபாயத்தால் தொடர்ந்து சைரன் ஒலிக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். இதேபோல், குவைத் மற்றும் ஜோர்டான் நாடுகளும் தங்களை நோக்கி ஈரானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்துள்ளன. குறிப்பாக, குவைத் ராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை முழு வீச்சில் தயார் நிலையில் வைத்து டிரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.