அக்கா கணவர் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவனை, இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டில் வைத்துப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் ஜார்க்கண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரான நீரஜ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்த நிலையில், ஊர்மிளாவின் மனதில் வேறு ஒரு விபரீத திட்டம் தீட்டப்பட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊர்மிளாவுக்கு அவரது சொந்த சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வான் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் எல்லையைத் தாண்டி, கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனக்கு நீரஜுடன் திருமணம் நடந்துவிட்டால், அக்கா கணவருடன் தொடர்ந்து உல்லாசமாக இருக்க முடியாது என ஊர்மிளா பயந்துள்ளார். இதனால், தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் வருங்கால கணவன் நீரஜை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டினர்.
அதன்படி, ஊர்மிளா தனது வருங்கால கணவன் நீரஜைத் தொடர்புகொண்டு வனப்பகுதிக்கு உல்லாசமாக இருக்க வரக் கோரியுள்ளார். மேலும், “யாரிடமும் சொல்லாமல் நீ மட்டும் தனியாக வா” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய நீரஜ் அவரது அழைப்பை ஏற்று ஆசையோடு குறிப்பிட்ட வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தது மரணம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வனப்பகுதியில் ஏற்கனவே மறைந்திருந்த ஊர்மிளாவும், அவளது கள்ளக்காதலன் சுபாஷ் பஸ்வானும் சேர்ந்து, தனிமையில் வந்த நீரஜை சுற்றி வளைத்துக் கத்தியால் கொடூரமாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த நீரஜ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அங்கேயே வீசிவிட்டு இருவரும் தப்பியோடினர். நீரஜ் காணாமல் போனதால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் இறங்கினர்.
நீரஜின் மொபைல் போன் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, அவரது கடைசி இருப்பிடம் பேலா வனப்பகுதி என்பதும், கொலை நடந்த சமயத்தில் ஊர்மிளாவின் மொபைல் போனும் அங்கிருந்ததும் உறுதியானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஊர்மிளாவைத் தூக்கிப் பிடித்து போலீசார் பாணியில் விசாரித்தபோது, அக்கா புருஷனுக்காக வருங்கால கணவனைக் கொன்ற மொத்த உண்மையையும் ஒப்புக்கொண்டு கதறினார். இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடி இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
