இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மையை உடைத்து, அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஜூலை 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த அதிநவீன ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களுக்கு இடையே வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. டெல்லி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 89 கிலோமீட்டர்கள் ஆகும். இந்தச் சூழலில் தான், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் மீது, நடைமேடை மற்றும் தண்டவாளத்தில் நின்றபடி பயணிகள் சிலர் சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.

 

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள வடமத்திய ரயில்வே நிர்வாகம், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் தவறானது என்றும், அது ஒரு பழைய வீடியோ என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளாகும் ரயில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலே கிடையாது என்றும், அது மற்றொரு ரயில் என்றும் ஆதாரத்துடன் அந்தப் புகாரை மறுத்துள்ளது. ஹரியானாவின் பெருமையாக விளங்கும் ஹைட்ரஜன் ரயில் எவ்வித இடையூறுமின்றி, தனது திட்டமிட்ட அட்டவணைப்படி தடையின்றி இயங்கி வருவதாகவும் ரயில்வே துறை உறுதியளித்துள்ளது.

ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில், 89 கி.மீ தூரத்தை வெறும் 2 மணி நேரத்தில் கடந்து விடுகிறது. அதோடு  12 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மேலும் இந்த அதிநவீன ரயில் சேவை அப்பகுதி மக்களுக்கு மிகச்சிறந்த போக்குவரத்துப் பயனை அளித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.