கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில், ஐந்து மாத ஆண் குழந்தையை அதன் தாயே, தனது லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி எஸ். பாரதி (25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (22) என்பவருக்கும் இடையே ஒரே பாலின உறவு இருந்து வந்தது.

இந்த உறவு காரணமாக, கணவர் சுரேஷுக்கும் பாரதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், நவம்பர் 2ஆம் தேதி கணவர் மற்றும் குடும்பத்தினர் வேலைக்குச் சென்றிருந்தபோது, பாரதி தனது ஐந்து மாத மகன் துருவனை மூச்சுத்திணறடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குழந்தை எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகக் குடும்பத்தாரிடம் பொய்கூறி, இறுதிச்சடங்குகளையும் முடித்துள்ளார் பாரதி.

ஆனால், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த கணவர் சுரேஷ், காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து விசாரணை தொடரப்பட்டது. விசாரணையில், பாரதி தனது தோழி சுமித்ராவுடன் இருந்த லெஸ்பியன் உறவுக்காக, குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், குழந்தையைக் கொன்ற பிறகு, அதன் புகைப்படத்தைத் தனது தோழி சுமித்ராவுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பியதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது கைப்பேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்டன. திடுக்கிடும் இந்த வழக்கில், பாரதி மற்றும் அவரது லெஸ்பியன் தோழி சுமித்ரா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.