சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், வாகன விபத்தில் உயிரிழந்த கோயில் மாடு ஒன்றின் வயிற்றினுள், 10 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகளும், சிமென்ட் சாக்கு பைகளும் இருந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் அலைந்து திரிகின்றன.

தினசரிச் சந்தை, வாரச் சந்தை போன்ற இடங்களில் மீதமாகும் காய்கறிகள், பழக் கழிவுகளை உண்டு வாழும் இந்த மாடுகள், உணவு கிடைக்காத காலங்களில் குப்பை மேடுகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகள், சிமென்ட் சாக்குகள் போன்ற மக்காத குப்பைகளையும் அறியாமல் உண்டு விடுகின்றன. இதனால், மாடுகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவை அடிக்கடி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிவகங்கை சாலையில் அதிவேகமாகச் சென்ற வாகனம் மோதியதில் ஒரு கோயில் மாடு உயிரிழந்தது. பரிசோதனையின்போது, அதன் வயிற்றில் நிரம்பச் சேர்ந்திருந்த 10 கிலோ அளவிலான பிளாஸ்டிக் மற்றும் சிமென்ட் சாக்குகளைக் கண்டு, விலங்கு நல ஆர்வலர்கள் பெரும் வேதனை அடைந்தனர் .

சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் வகையில் குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதே, இந்த பாவப்பட்ட விலங்குகளின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மக்காத குப்பைகளைத் திறந்தவெளியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோயில் மாடுகளுக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.