மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு 25 பயணிகளுடன் புறப்பட்ட குளிர்சாதன அரசுப் பேருந்து ஒன்று, நேற்று மாலை 4.30 மணியளவில் மதுரை-தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தது.

அப்போது, சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த மோதலில், பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியதில், பயணிகள் அனைவரும் பீதியில் கூச்சலிட்டனர்.

இந்தக் கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் நல்லுசாமி (45), பஸ்சில் பயணித்த மும்பையைச் சேர்ந்த மகேஷ் (31) ஆகியோர் உடல் நசுங்கி உயிருக்குப் போராடினர். மேலும், மகேஷின் மனைவி வினிதா (31), தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் ரேணுகாதேவி (24) உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஓட்டுநர் நல்லுசாமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர் ரேணுகாதேவி உள்ளிட்ட 7 பேருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் வியாபாரம் செய்து வந்த மகேஷ், மனைவி வினிதாவுடன் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த நிலையில் உயிரிழந்ததால், கணவரைப் பறிகொடுத்த வினிதா கதறி அழுதது காண்போரை உருக வைத்தது. இந்த விபத்து தொடர்பாக, போலீஸார் லாரி டிரைவர் சண்முகராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.