செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நீதித்துறையிலும் முக்கிய சாதனமாக வளர்ந்து வரும் இந்நேரத்தில், பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், சட்டவியலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வழக்கின் விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர் தனது செல்போனில் கூகுள் அல்லது ஏஐ மூலம் பதிலளிக்க முயன்றதை கவனித்த நீதிபதி சஞ்சய் வசிஷ்த், உடனடியாக அந்த செல்போனை பறிமுதல் செய்து, கடும் எச்சரிக்கையுடன் தீர்ப்பளித்தார்.
“வாதத்தின் போது செல்போன் பயன்பாடு தொழில் முறையற்றது. இது மரியாதைக்கு முற்றிலும் எதிரான செயல்” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். வழக்கறிஞர்கள் விசாரணைக்கு முன்பே தேவையான தகவல்களுடன் தயாராக வர வேண்டும் என்றும், வாதத்தில் செல்போனை நம்பி நடக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஐபேட்கள், லேப்டாப்புகள் போன்றவை தொழில்முறை கருவிகள் என்றாலும், “செல்போன் என்பது வாதத்தின் போது கவனத்தை சிதறடிக்கும் சாதனம்” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம், நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் இடையே மனிதத் திறமை, ஒழுக்கம் மற்றும் நடத்தை என்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
“AI என்பது உதவிக்கு மட்டுமே. அது மனித நுண்ணறிவை மாற்றுவதற்கில்லை” என்ற மூத்த நீதிபதிகளின் எச்சரிக்கை, இந்நேரத்தில் மிகப் பொருத்தமாக பார்க்கப்படுகிறது.
